Sunday, November 8, 2009

மழைப் பேச்சு


கொஞ்சம் மழை பெய்தாலும் சென்னை நாறிப் போகிறது. நேற்று வரை மழையே இல்லை என்று புலம்பிய நாக்கு நான்கு தூறலைப் பார்த்ததும் 'அப்பா! என்ன மழை' என்று ஆச்சரியப்பட்டுப் போகிறதைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அலுவலகத்துக்குப் போய் வருவதற்குள் பல காவிரி ஆறுகளைச் சென்னை வீதிகளீல் பார்த்து விட்டேன் இன்று. சாக்கடை கலந்த 'காவிரி'.
எல்லோரும் வழக்கம் போல் அரசாங்கத்தை திட்டித் தீர்த்தாயிற்று. எவ்வளவு தண்ணீர் வீணாகிறது. இதை சேர்த்து வைக்கிற வழிமுறைகளை ஏன் இந்த அரசு செய்வதில்லை என்று ஒருமித்த குரலில் அழுது புலம்பியாயிற்று.மழை நீர் சேகரிப்பு பொதுமக்களுக்கு மட்டும்தானா? அரசுக்கு இல்லையா என்று பொதுவாக எல்லோருமே பேசிக் கொண்டோம். என்ன பேசி என்ன பயன்.நாளை மழை நின்று சென்னை காய ஆரம்பித்ததும் எல்லாம் மறந்து போய் அடுத்த மழைக்கு இதையே தூசுத் தட்டி பேசப் போவது இப்போதே தெரிகிறது. மாமழை போற்றுதும்.

Saturday, November 7, 2009

கலவர பூமியில்


பேசித் தீர்த்து விடு
உன் கனவுகளை,
உன் கண்ணீரை
மடைதிறந்தது போல்--
தோள் கொடுக்கத் தோழனாய்
தவறிச் சரிகையில்
தாங்கிக் கொள்ளும் நண்பனாய்
நாளைக்கு
இருப்பேனோ இல்லையோ

நேற்றைக்கு இருந்த என்
அன்னையும், அப்பாவும்
உன் தாயும் தந்தையும்
தொழுகையிலேயே
குண்டடிப்பட்டார்கள்
வீடுசென்று சேருமுன்னே
என் இருப்பும் அப்படியே

குறைந்தபட்சம்
உன் வலி தெரிந்தவனாய்
உயிர் பிரிதல்
எனக்குப் பிடித்தமே!

எள்ளாமை (சிறுகதை)

முடி திருத்திக் கொண்டு வரலாம் என்று கோவிந்தன் கடைக்குச் சென்ற போது கோவிந்தனைக் காணவில்லை. இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் வீற்றிருந்தான். அவனையும் என்னைப் போல முடிதிருத்திக் கொள்ள வந்தவன் என்றெண்ணி “கோவிந்தன் இல்ல?” என்று கேட்டேன்.
“இல்ல சார்,அவருக்கு உடம்பு சரியில்ல, ஹாஸ்பிடல் வரைக்கும் போயிருக்கார், வரமாட்டார்” என்றவன் “என்ன முடிவெட்டணுமா?” என்று கேட்டான்.
“ஆமா, நீ....” என்று இழுத்தேன்.
“நானும் முடிவெட்டறவந்தான் சார், உக்காருங்க”, என்றவன் நான் அமர சுழல் இருக்கையைச் சுத்தம் செய்து விட்டு இழுப்பறை மேசையிலிருந்து சுத்தமான வெள்ளைத் துணி ஒன்றை எடுத்தான்.
எனக்குப் பத்து வருடங்களாக கோவிந்தனிடம் முடிதிருத்திப் பழகிப் போனதால் இவன் என்னை உட்காரச் சொன்னதும் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. என் தயக்கத்தை அவன் புரிந்துக் கொண்டிருக்க வேண்டும்.
“உங்களுக்கு என்ன மாதிரி முடி வெட்டணும்னு சொல்லுங்க சார், அதே மாதிரி வெட்டி விடறேன்” என்று அவன் சொன்னபிறகு மறுக்க மனம் வராததற்கு மீண்டும் அடுத்தவாரக் கடைசியில்தான் என்னால் இதற்காகக் கிளம்பி வரமுடியும் என்பதுதான் முக்கிய காரணமாயிருந்தது.
சுழல் இருக்கையில் அமர்ந்தேன்.
வெள்ளைத் துணியால் என்மார்புப்பகுதியைப் போர்த்தி நீளமான பாட்டிலில் வைத்திருந்த நீரைக் கொண்டு என் கேசத்தை நனைத்தவன் எந்தமாதிரி முடிவெட்ட வேண்டும் என்று என் விருப்பத்தை அறியாமலேயே கத்திரிக் கோலால் கடகடவென்று வெட்டத் துவங்கினான்.
கோவிந்தன் கதை வேறு. எல்லாம் கேட்பார். கேசத்தை நீரால் நனைத்து விரல்களால் லேசாகக் கோதி வெட்ட ஆரம்பித்தார் என்றால் தூக்கம் சொருகிக் கொண்டு போகும். இடையில் ஒரு பேச்சு கிடையாது. பாதிமயக்கத்தில் இருக்கும் போதே “ஆச்சு சார்” என்று எழுப்புவார்.அவர் எப்படி வெட்டினாலும் பழகிப் போனதால் பிடித்தமானதாகவே இருந்தது. 52 வயதில் சிகை அலங்காரத்தில் ரொம்பவும் அக்கறைக் காட்டத் தேவையில்லை என்ற சித்தாந்தத்தில் வேறு இருந்தேன்.
இவன் ஏதோ கேட்டிருக்க வேண்டும். “என்ன சார் தூங்கிட்டீங்களா?” என்றான்.
“என்ன கேட்டே?” என்று கேட்டேன்.
“இல்ல, எங்க வேலையா இருக்கீங்கன்னு கேட்டேன்” என்றான் அவன்.
“பாங்க்ல” என்று பதிலிறுத்தவன் நான் பணிபுரியும் வங்கியின் பேரைச் சொன்னேன்.
“இப்பல்லாம் பாங்க் உத்தியோகத்தில ஒரு கவர்ச்சி இல்ல, இல்லீங்க சார்? இப்பல்லாம் ஐடி ஸெக்டார்தான் பாபுலர்” என்றவனிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இருபத்தைந்து வருடமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருப்பவனைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்னவென்று சொல்வது?
ஆனாலும் இவன் என்ன எல்லாம் தெரிந்த வித்தகன் போலக் கேள்வி கேட்பது, நாம் மௌனமாக இருப்பது என்ற கர்வம் எனக்குள் எழவே கொஞ்சம் குரலை உயர்த்தி “என்ன பாப்புலர்? பத்து வருஷத்துக்கு முந்தி எங்க இருந்ததாம் இந்த ஐடி ஸெக்டார் வேலையெல்லாம். இப்ப அதில் மட்டும் என்ன வாழுதாம்? ரிஸஷனுக்குப் பிறகு என்ன ஆச்சு பார்த்தீங்கல்ல? அரசாங்க உத்தியோகம் பேர்ல இப்ப எல்லாருடைய பார்வையும் திரும்பியிருக்கு” என்று காட்டமானேன்.
சரி, இவனுக்கு ரிஸஷன் என்றால் என்னவென்று தெரியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான். சரியாக மாட்டிக் கொண்டான் என்று நான் சந்தோஷப்பட்டேன்.
ஆனால் அவன் அதை விட்டு விட்டு முடி வெட்டி முடிப்பதற்குள் உலக அரசியல் எல்லாவற்றையும் அலசி எடுத்து விட்டான். இலங்கைத் தமிழர் பிரச்சினையிலிருந்து, ஒஸாமா பின் லேடனிலிருந்து, ஒபாமா வரை அவன் பேசியதைக் குறுக்கீடு ஏதும் செய்யாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கும் நேரம் போக வேண்டியிருந்ததாலும், அவன் பேசிய விதம் என்னைக் கவர்ந்ததாலும் குறுக்கே பேசி சூழ்நிலையைப் பட்டிமன்றம் ஆக்கி விட விரும்பவில்லை.
பரவாயில்லை கடையில் இருக்கும் 'தினத்தந்தி', 'தினமலர்' எல்லாவற்றையும் வரி விடாமல் படிப்பான் போல என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.
ஒன்றைக் கவனித்தேன். பேசிக் கொண்டே இருந்தாலும் அவன் கை தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான். கத்திரிக்கோல் அவனுக்கு அடிமைப்பட்டது போல அப்படியும் இப்படியுமாக கச்சிதமாய் வெட்டிக் கொண்டிருந்தது.
முடிந்ததும் கழுத்திலிருந்து துண்டை லாவகமாக எடுத்து அதில் படிந்திருந்த கேசத் துண்டுகளைத் தரையில் கொஞ்சம் கூடச் சிதறாமல் கூடையில் கொட்டிய விதத்தைப் பார்த்ததும் இவன் இந்தத் தொழிலில் கைதேர்ந்தவனாக வருவான் என்பதை எனக்குள் உணர்ந்தேன்.
கோவிந்தனை விடவும் நேர்த்தியாகவே முடித்திருத்தம் செய்திருந்தான். எனக்கு நானே அழகானவனாகத் தெரிந்தேன்.ஆனால் ஏனோ அவனைப் பாராட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவன் அதை எதிர்ப்பார்த்தவனாகவும் தெரியவில்லை.கோவிந்தனிடம் எவ்வளவு தருவேனோ அவ்வளவு பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.
என் மனைவி வீட்டுக்குள் நுழையும் போதே கேட்டாள் “என்னங்க! கோவிந்தன் கடைக்குப் போகலையா, வித்தியாசமா இருக்கு கட்டிங்”.
“இல்ல இல்ல அவர் கடைக்குத் தான் போயிருந்தேன். புதுசா ஒரு பையன் வந்திருக்கான், அவந்தான் வெட்டினான்.நல்லா வெட்டியிருக்கான்ல? என்ன, கொஞ்சம் வாய், பேசிப் புண்ணாக்கிட்டான். பெரிய அரசியல்வாதியா வரலாம் அவ்வளவு பேச்சு”
“உங்களுக்குத்தான் பேச ஆள் கிடச்சா அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே! உங்களையே மிஞ்ச ஒரு ஆளா?” என்று என்னைக் கேலி செய்யும் விதமாகச் சிரித்தாள் என் மனைவி.
“நீவேற கடுப்படிக்காதே” என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் கோவிந்தனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “என்ன ஆச்சு உடம்புக்கு? போன வாரம் வந்திருந்தேன், நீங்க இல்ல, புதுசா யாரோ ஒரு பையன் இருந்தான். அவங்கிட்டதான் முடி வெட்டிக்கிட்டுப் போனேன்,” என்றவாறு கடைக்குள் அவனைத் தேடி எட்டிப் பார்த்தேன். உள்ளே யாரும் இல்லை. 'எங்கே போனான்?'
கோவிந்தன் ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டது போலச் சிரித்துவிட்டு,” அட நீங்க தானாஅது? மாணிக்கவேலு சொன்னான்,
'யாரோ ஒருத்தர் எங்கிட்ட வகையா வந்து மாட்டினார், பாவம் நான் பேசினத எல்லாம் தலையெழுத்தேன்னு கேட்டுக்கிட்டு இருந்தாரு, ஏன்னா அவர் தலை எங்கிட்ட இல்ல இருந்தது'ன்னு சிரிச்சான். எனக்கு நீங்களா இருப்பீங்கன்னு தெரியாது” என்றார்.
எனக்கு அவர் பேரில் கோபம்தான் வந்தது. ஒரு வாடிக்கையாளரைப் பற்றி கடையில் வேலை செய்கிற ஒரு சிப்பந்தி கேலி செய்து சிரித்திருப்பதைக் கண்டிக்காமல் அதை ரசித்து விட்டு அதை வேறு என்னிடமே சொல்லிக் காட்டியதைக் கண்டதும் எனக்குள் 'கபகப'வென்று பற்றிக் கொண்டு வந்தது.
வெளிக் காட்டிக் கொள்ளாமல் “யார் அந்தப் பையன்? புதுசா வேலைக்கு வெச்சிருக்கீங்களா? எங்கே ஆளைக் காணோம்?” என்று பொதுவாகக் கேட்டேன்.
“புதுசா வெச்சிருக்கேனா, நீங்க வேற! என் தங்கச்சி பையன் சார் அவன், எனக்கு உடம்பு சரியில்லையின்னு கேள்விப்பட்டதும் ஓடி வந்துட்டான், இங்கே வந்து ஒரு வாரம் ஆச்சு, வீட்ல போரடிக்குதுன்னு எனக்கு உதவி பண்றேன் பேர்வழின்னு கடையில வந்து உக்காந்துக்கிட்டு இந்த வேலய செஞ்சிருக்கான். உங்களுக்குத்தான் தெரியுமே எனக்குப் பிள்ளைகளே இல்லையின்னு. இவனை என் சொந்தப் பிள்ளையா நானே வளத்து படிக்க வெச்சிருக்கேன். திருச்சில வேலயா இருக்கான்., நேத்துதான் போனான்” என்று மூச்சு விடாமல் பேசினார் கோவிந்தன்.
அவருக்குப் பிள்ளைகள் யாரும் இல்லை என்பது வரை மட்டுமே எனக்குத் தெரியும்.கோவிந்தனும் தன்னைப் பற்றி அவ்வளவாக பேசியதுமில்லை; மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையினைத் துருவித் தோண்டி ஆராயும் பழக்கம் எனக்கு இல்லாததால் அவரைப் பற்றித் தெரிந்துக் கொள்ள நானும் அதிகம் முயற்சித்ததில்லை. எனவே இது எனக்குப் புதுத் தகவலாக இருந்தது.
'படிச்சிருக்கான்னு சொல்றீங்க, இந்த வேலை எப்படி?” என்று இழுத்தேன்.
“சின்ன வயசிலேர்ந்து இங்கயே வளர்ந்ததால நேரம் கிடைக்கும் போது எங்கூட இருந்து பார்த்து கத்துக்கிட்டதுதான், ஆனா படு கெட்டிக்காரன், ஒரு வேலையை ஒரு தடவை பார்க்க வேண்டியதுதான் அடுத்த தடவை நாம செய்யறத விடவும் பிரமாதமா செய்வான் அப்படி ஒரு திறமை .” என்று அவனைப்பற்றி சிலாகித்துக் கொண்டார்.
“திருச்சியில என்ன வேலை? இதே மாதிரி கடையா? எப்படி”
கோவிந்தன் இதைக் கேட்டு விட்டு ஏன் அப்படிச் சிரித்தார் என்று எனக்கு ஒரு நிமிஷம் புரியவேயில்லை.
“கடையா? அவன் திருச்சி பெல் கம்பனியில எஞ்சினியரா இருக்கான் சார்”
நான் அதிர்ந்து போனேன். “என்னது?” என்று கிட்டத்தட்டக் கத்தியே விட்டேன்.
“ஆமா சார், இங்கே வேலம்மாள் காலேஜ்ல மெகானிகல் எஞ்சினியரிங்க் கோர்ஸ் முடிச்சிட்டு திருச்சியில வேலை கிடைச்சி போய்ட்டான்”
அதற்குப் பிறகும் அவர் என்னமோ சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும். என் மண்டையில் தான் ஏறவில்லை.


அக்டோபர்-2009

பொய்கள் (சிறுகதை)

“அம்மா,அய்யா” என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தேன்.40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் நின்றிருந்தார்கள்.
“என்ன?” என்றேன்
“அய்யா, இந்த பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வெச்சிருக்கேன், மடிப்பிச்சை எடுத்து தாலி வாங்கி கல்யாணம் பண்றதா வேண்டுதல், அதனால ஒங்களால முடிஞ்ச உதவி பண்ணா நல்லாருக்கும்” என்றாள் மூத்த பெண்மணி.
பார்க்க பிச்சை எடுத்துப் பிழைக்கிற கூட்டமாகத் தெரியவில்லை. நல்ல உடை உடுத்தி பளிச் சென்று இருந்தார்கள். காதிலே கம்மலும், கழுத்திலே மெல்லிய சங்கிலியுமாக லேசான வசதியும் தெரிந்தது.
என்னுடைய மௌனத்தை எப்படிப் புரிந்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.
“அய்யா, தர விருப்பமில்லைன்னா பரவாயில்லை, நாங்க இருக்கப்பட்டவங்கதான், இந்த பொண்ணுக்கு கல்யாணமே அமையலைன்னு அம்மனுக்கு வேண்டிக்கிட்டேன்.அதான் இப்படி ஒரு நிலை” என்று அந்தப் பெண் நகர முயன்றாள்.
“இருங்க ,இருங்க”என்ற நான் உள்ளே சென்று ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைக் கொண்டு வந்து அவளிடம் தந்தேன். “இவ்வளவுதான் என்னால முடிஞ்சது” என்று ஏதோ ஒரு குற்றத்தைச் செய்து விட்டவனைப் போல சொன்னேன்.
“இது போதுங்கய்யா! உங்களுக்குப் புண்ணியம்,இது மாதிரி ஒரு பத்து வீட்ல கொடுத்தாங்கன்னா போதும்”, என்று தன் முந்தானையில் அதை ஏந்திக் கொண்டாள்.கைக்கூப்பி நகர்ந்தாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி கேட்டாள்,” கேட்டதும் தூக்கிக் கொடுத்திட்டீங்களே, அந்த பொம்பளே சொன்னதெல்லாம் நிஜம்னு நம்பிட்டீங்களா?”
“என்ன அப்படி கேட்டுட்டே, அவங்களப் பாத்தா ஏமாத்தற ஆளுங்க மாதிரியா இருக்கு?” என்ற எனக்குள் ஏமாந்து விட்டோமோ என்ற சந்தேகம் இப்போது எழுந்தது.
“இப்பல்லாம் இது ஒரு புது மாதிரியான பிச்சைங்க” என்ற என் மனைவி அது பற்றி மேலே பேசாமல் விட்டது எனக்கு நிம்மதியாக இருந்தது.
அடுத்த பத்து நாட்களில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடக்கும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.
வாசலிலே என் ஸ்கூட்டியைக் கழுவிக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரம்.
“சார்!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். பள்ளி மாணவன் போலத் தோற்றமளித்த ஒருவன் நின்றிருந்தான்.
“என்னப்பா?” என்று கேட்டேன்
கையில் வைத்திருந்த கோப்பிலிருந்து ஒரு காகித்தை எடுத்து நீட்டினான். கையைத் துடைத்துக் கொண்டு வாங்கிப் பார்த்தேன். ஏதோ ஒரு கல்லூரியிலிருந்து வந்த கடிதம். ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் கல்லூரிக் கட்டணம் கட்டச் சொல்லி வந்த நினைவூட்டல் கடிதம் அது.
“என்ன இதுக்கு?” என்றேன் புரியாமல்.
“சார்! நான் அப்பா இல்லாதவன் சார்! அம்மாதான் எல்லாம், அவங்ககளும் கூலி வேலை செய்றவங்க தான், நான் படிச்சி குடும்பத்தைக் காப்பத்துனாதான் உண்டு. முதல் வருஷ ஃபீஸ் கட்ட கொஞ்சம் பணம் கொறையுது. இது மாதிரி அங்க இங்க வாங்கி கொஞ்சம் சேத்துட்டேன். நீங்க உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க சார்” என்று கண்களில் ஒரு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்போடு என்னைப் பார்த்தான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதை நம்புவதா இல்லையா என்று குழப்பம். ஒருவனின் எதிர்காலம் பற்றிய விஷயம் இது. என் மனைவி சொன்னது போல இது ஒரு புது மாதிரியான பிச்சையாக இருந்தால்?ஆனால் அவன் காட்டிய கடிதத்தில் ஏதும் தில்லு முல்லு இருப்பதாகவும் தெரியவில்லை.அவனுடைய முகத்தில் பொய் இல்லை. சரி உதவி செய்துதான் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்.
வீட்டுக்குள் வந்து பணம் எடுக்கும் போது என் மனைவி என்னைப் பார்த்து” உங்களுக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா? யார் வந்து கேட்டாலும் எந்த கேள்வியும் கேட்காம பணத்தைக் கொடுக்குறீங்க “ என்று கேட்டாள்
“பாவம் படிப்புன்னுதானே கேட்குறாங்க, உதவி பண்ணா என்ன தப்பு? இதான் கடைசி சரியா” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவனிடம் முன்னூறு ரூபாயைக் கொடுத்தேன். “பேர் என்ன?” என்று கேட்டேன் “கண்ணன்” என்றான்.
என் கைப்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டு “ரொம்ப நன்றி சார், பீஸ் கட்டினதும் உங்களுக்கு போன் பண்றேன் சார்,” என்று சொல்லிவிட்டுப் போனான்.
சொன்னபடியே இரண்டு நாட்களில் போன் செய்தும் சொன்னான். பாத்தியா என்று என் மனைவியிடம் சொல்ல அவள் என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் ஆதம்பாக்கத்தில் உள்ள என் நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.வாசலில் யாரோ “சார்” என்று குரல் கொடுத்தார்கள். வெளியே வந்து பார்த்தால் என் வீட்டுக்கு வந்த அதே பெண்கள்.
“என்ன?” என்றார் என் நண்பர். என்னிடம் ஒப்புவித்த அதே கதையை மாறாமல் சொன்னாள் அவள். “இல்ல, இல்ல, இது மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் ஹெல்ப் பண்றதில்லே, கிளம்புங்க” என்றார் அவர்.எனக்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டேன். அந்த பெண்ணைக் கூப்பிட்டு கேட்டு விடலாமா என்றும் கூட எண்ணம் வந்தது.
அவர்கள் போனதும் கேட்டேன் ஒன்றும் புரியாதவன் போல, “ஏதாவது கொடுக்க வேண்டியதுதானே?”
“நீ வேற விஷயம் புரியாம இது எல்லாம் பொய் வேஷம் நம்மகிட்ட காசு வாங்கிட்டுப் போய் தண்ணி அடிச்சிட்டு சினிமா பாப்பாங்க! இவங்களுக்கு உதவுறது பைத்தியக்காரத்தனம்” என்றார் அவர்.புத்திசாலி!
அவரிடம் நான் பைத்தியம் ஆன கதையைச் சொல்லவில்லை. என் மனைவியிடமும் இது பற்றி பிரஸ்தாபிக்கவில்லை.ஏனோ கண்ணனைப் பற்றி அந்நேரம் நினைப்பு வந்தது.
ஒரு நாள் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. கண்ணன்தான் பேசினான். அவனைப் பேச விடாமல் “இதோ பார் பணம் கிணம்னு வந்து நிக்காதே இதோட நிறுத்திக்கோ சரியா? ஃபிராட்ஸ்” என்று கத்தி விட்டு போனை வைத்தேன்.என்னை அப்படிப் பேச வைத்து அந்தப் பெண்கள் என்பது எனக்குப் புரிந்தது.
ஆறு மாதம் கழித்து ஒரு நாள் திருமணம் ஒன்றில் கலந்துக் கொள்ள திருத்தணி சென்றிருந்தோம். எல்லாம் முடித்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் காத்திருக்கிற நேரத்தில் காபி சாப்பிடலாம் என்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.
“என்ன சாப்பிட்றீங்க சார்?” என்று என் எதிரில் வந்து நின்றவன் கண்ணன். “நீ...?” என்று இழுத்தேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான்.
“சார், இது பார்ட் டைம் ஜாப் சார், எனக்கு படிக்க அரசாங்கத்திலிருந்து ஸ்காலர்ஷிப் கிடைச்சிடுச்சி சார், அதைச் சொல்லத்தான் உங்களுக்குப் போன் செஞ்சேன் சார்! நீங்க அன்னைக்கு என்ன நிலையில இருந்தீங்கன்னு தெரியல சார்! சரி நேர்ல வந்து சொல்லலாம்னு இருந்தேன் சார், என்ன சாப்பிட்றீங்க சார் ?”என்றான்
காபி சாப்பிட்டு விட்டு அவனை வாழ்த்தி விட்டு நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தேன்.
“வேண்டாம் சார்” என்று மறுத்து விட்டான்.
வெளியே வந்து என் மனைவியிடம்,” பாத்தியா அன்னைக்கு என்னமோ சொன்னியே, வாழ்க்கையில மனுஷாளுங்க பேர்ல கொஞ்சம் நம்பிக்கை வைக்கணும், அந்த பொண்ணுக்கும் இந்நேரம் கல்யாணம் ஆகியிருக்கும் இல்ல? என்றேன்.
“ஆமால்ல?” என்றாள் அவள்.
“ஆமாவா? இல்லையா? ஏதாவது ஒன்னு சொல்லு”, என்று சிரித்தேன் நான்.